புதன், 30 டிசம்பர், 2015

கருமங் கண்ணாயினார் செயல்



மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்

(பொ-ள்.) கருமமே கண்ணாயினார்- (தாம் தொடங்கிய) காரியத்தை முடிப்பதிலேயே கருத்துக்கொண்டவர், மெய் வருத்தம் பாரார் - (தம்) உடம்பின் வருத்தத்தைக் கவனியார், பசி நோக்கார் - பசியையும் கவனியார், கண் துஞ்சார் - உறங்கார்,எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - யார் தீங்கு செய்தாலும் அதைப்பொருட்படுத்தார், செவ்வி-காலத்தின்; அருமையும் பாரார் - அருமையையும் நோக்கார்,அவமதிப்புங் கொள்ளார் - (பிறர் செய்யும்)அவமதிப்பையும் கருதார்.
(வி-ம்.) கண் துஞ்சார்; உயர்திணையொடு சார்ந்த அ ஃறிணைப் பெயர் உயர்திணை முடிபேற்று ஒரு சொன்னீர்மைத்தாய் நின்றது. எவ்வெவர் - எவர்; பன்மைப் பொருள்களில் வந்த அடுக்குத் தொடர்,ஏ: பிரிநிலை. துருவன், இருண்ட காட்டில் வெயில், பனி, மழை முதலியவற்றால்உடலுக்கு ஏற்பட்ட மெய்வருத்தம் பாராமலும், பசி நோக்காமலும், கண் துஞ்சாமலும், கொடிய காட்டு விலங்குகளின்தீமையை மேற்கொள்ளாமலும்தன்கருமமே கண்ணாகித்திருமாலினிடம் பதவி பெற்ற வரலாறு இதற்குச் சான்றாகும்.
(க-து.) ஒரு தொழிலைச் செய்து முடிக்க முன்னிற்போர்தமக்கு வரும் எவ்வகை இடையூறுகளையும் பொருட்படுத்தார்.

காலம் அறிந்தாங் கிடமறிந்து செய்வினையின்
மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம்
சூழ்வன சூழாது துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப் படும்

(பொ-ள்.) காலம்அறிந்து - (ஒரு காரியத்தைச் செய்தற்குரிய) காலத்தினை அறிந்து, இடம் அறிந்து- அக்காரியத்தைச் செய்து முடித்தற்கேற்ற இடத்தினையும்அறிந்து, செய்வினையின் மூலம் அறிந்து - செய்யும் அக்காரியத்தின் காரணத்தையும் அறிந்து, விளைவு அறிந்து - அதைச் செய்து முடித்தபின் அதனாலேற்படும் பயனையும்அறிந்து, மேலும்-பின்னும், சூழ்வன.தாம் சூழ்ந்து - ஆராய வேண்டியவற்றை ஆராய்ந்து, துணைமை வலி தெரிந்து - (அக்காரியம் செய்து முடித்தற்குத்) துணை செய்ய இருப்போர் வலிமையுந்தெரிந்துகொண்டு, ஆள்வினை - முயற்சி, ஆளப்படும்- (பின்னர்ச்) செய்யப்படும்.
(வி-ம்.) மக்கள்யாவர்க்கும்இந்நீதி பொருந்துமேனும்போர்த் தொழில்புரியும் புரவலர்க்கு முதன்மையானதாகும். காலமறிதல்-தமக்கும் பகைவர்க்கும்ஆகும்காலம்,ஆகாத காலம்இரண்டையும் அறிதல். தமக்குஆகுங்காலம்- படைச்செலவுக்குப்போதியபொருள்இருக்குங் காலம்முதலியன. இடமறிதல்- தமக்கும்பகைவருக்கும்வெல்லுதற்குத்தக்க இடமும், தகாதஇடமும்அறிதல். வினையின்மூலம்அறிதலாவது, போர் செய்யப்புறப்படுங்காரணம்நன்றோ தீதோ என்றுஅறிதல்; விளைவு, அதன்பயனையெல்லாம்அறிதல், மேலும் சூழ்வன சூழ்தலாவது - போர் செய்யுங்கால் நிகழுமென நினைக்கும் இடுக்கண்களையும், அவ்விடுக்கண்களைக்களையும் வழிகளையும் ஆராய்தல், துணையறிதல் - துணையரசர்கள் தன்மையையும் தொழிலுக்கு வேண்டிய காரணங்களாகிய தேர், யானை, குதிரை,காலாட்படை இவற்றின் வலிமையையும் படைத்தலைவர்முதலியோா திறமையையும், படைக்கு வேண்டிய உணவுப்பொருள் நிலைமையையும் அறிதல். "இடத்தொடு பொழுது நாடிச்செய்வினைக்கண்ணு மஞ்சார்"என்னும் சிந்தாமணியும்,"பகல்வெல்லுங்கூகையைக்காக்கை இகல்வெல்லும், வேந்தர்க்குவேண்டும்பொழுது" என்னுந்திருக்குறளும் நினைவுகூரற்பாலன, ஆங்கு, தாம்என்பன அசை.
(க-து.) கருதிய தொழிலை முடிக்கக்காலம்இடம்துணை முதலியன இன்றியமையாதன. (52)