வியாழன், 19 ஜூலை, 2012

சுய குறிப்பு


டாக்டர் பழனி.கந்தசாமி, பி.எச்.டி.

அறிமுகக் குறிப்பு.

நான் 1935 ல் கோயமுத்தூர் நகரத்தில் ஒரு கீழ் நடுத்தர வர்க்க விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். என் பாட்டனார் காலத்தில் எங்கள் குடும்பம் பக்கத்துக் கிராமத்தில் இருந்து பிழைப்புக்காக நகரத்திற்கு குடி பெயர்ந்த ஒன்று. என் தகப்பனார் கோவையிலுள்ள ஒரு கிறிஸ்தவ தொழிற்பள்ளியில் தச்சுத்தொழில் கற்று அதில் பேடன்ட் (Patent) செய்யும் ஒரு திறமைசாலியாக வளர்ந்தார்.

கோவையிலேயே குடியிருந்ததால் என்னுடைய கல்வி முழுவதும் கோவையிலேயே முடிந்தது. விவசாய பட்டப்படிப்பு படித்ததால் விவசாய இலாக்காவில் வேலை கிடைத்து 38 வருடங்கள் பணி புரிந்து ஓய்வு பெற்றேன். ஓய்வூதியம் வருகின்றது.

சிறுவயதிலிருந்தே புதிதாக வரும் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. அந்த ஆர்வத்தினால்தான் கம்ப்யூட்டரையும் கற்றேன். என் நண்பர் ஒருவர் ஆங்கிலத்தில் பிளாக் எழுதிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்து நானும் ஆங்கிலத்தில் ஒரு பிளாக் ஆரம்பித்தேன். அப்படி எழுதிக்கொண்டு இருக்கும்போதுதான் தமிழிலும் பிளாக்குகள் இருப்பதை அறிந்தேன்.

தமிழ் எழுத்துகளை வசப்படுத்துதலை நானே கற்றுக்கொண்டு 2009 ல் இந்த “சாமியின் மன அலைகள்” என்ற பிளாக்கை ஆரம்பித்தேன். யாரிடமும் போய் இதைக் கற்றுக்கொடுங்கள் என்று கேட்கும் வழக்கம் இல்லை. இந்த கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களையெல்லாம் நானே தட்டுத்தடுமாறி கற்றுக்கொண்டேன்.

வலையுலகத்தில் எனக்கென்று எந்தக் குழுவும் இல்லை. என் எழுத்தை விரும்பிப் படிக்கிறவர்கள் இருக்கிறார்கள். எனக்கு சுயவிளம்பரம் பிடிக்காது. இருந்தாலும் தமிழ்மணத்தில் என்னை நட்சத்திரப் பதிவராக ஒரு வாரம் பதவி வகிக்கக் கூப்பிட்டிருக்கிறார்கள். தமிழ்மணம் தமிழ்ப் பதிவர்களுக்கு ஒரு மகத்தான சேவை செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் என்னைப் பெருமைப் படுத்தியிருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அந்தப் பெருமைக்கு தகுதியானவனாக என்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன்.